பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் கலங்கலான குடிநீர் வினியோகம்

தேனி: பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஜவஹர் நகர் பகுதியில் கலங்கலான குடிநீர் வினியோகித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் இருதினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு 2வது வார்டிற்கு உட்பட்ட ஜவஹர்நகர் மாரியம்மன் கோயில் தெருவில் நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் பிடித்த குடிநீர் கலங்கலாகவும், துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த நீரை குடிக்க பயன்படுத்த வில்லை.

இச்சம்பவம் பற்றி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசி ரோஸ்லின் அன்புராணி கூறுகையில், 'தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்த நீர் முறையாக வெளியேற்றப்பட்டு விட்டது. தொட்டியின் அடிப்பகுதியில் தேங்கியிருந்த சிறிதளவு நீர் குழாய் வழியாக வந்துள்ளது. இதனை பயன்படுத்த வேண்டாம் என அலுவலர்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

தொட்டியில் முழுவதும் தண்ணீர் நிரப்பபட்டு மீண்டும் கலங்கல் இல்லாத குடிநீர் சிறிது நேரத்தில் வினியோகம் செய்யப்பட்டது என்றார்.

Advertisement