தமிழும், பேச்சும் என் உயிர்மூச்சு: மேடை பேச்சாளர் அருண் பெருமிதம்

இவரது சில அர்த்தமுள்ள பேச்சுகள் 'ரீல்ஸ்' ஆக பரவி வருகின்றன. படித்தது சட்டம், செய்வது வழக்கறிஞர் தொழில் என்றாலும் 'பேச்சு' இவருக்கு புகழ் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இவரது பேச்சால், 'மறந்து போன' சொந்தங்கள் தேடி வந்து இவரை தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக்கி கொண்டது தமிழுக்கு கிடைத்த பெருமை என்கிறார். இவர்தான் 31 வயதான அருண்.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...

நான் விருத்தாசலத்தைச் சேர்ந்தவன். பள்ளியில் படிக்கும் போதே பேச்சுப்போட்டியில் பங்கேற்றேன். சின்ன சின்ன பரிசு, கைத்தட்டல் எனக்கு உற்சாகம் தந்தது. பேச்சுப்போட்டி தலைப்பு கொடுத்ததும் என் அம்மா மேனகா, தெரிந்த ஆசிரியர்களிடம் எழுதி வாங்கி கொடுப்பார். நான் மனப்பாடம் செய்து பேசி பரிசு பெறுவேன். உறவினர்கள், அம்மாவின் தோழிகள் வீட்டிற்கு வரும் போது என்னை பேச வைத்து அம்மா அழகு பார்ப்பார்.

பிறகு மத்திய சட்டப் பல்கலையில் சட்டம் முடித்து, 2011ல் 'டிவி' நிகழ்ச்சிகளில் பேச ஆரம்பித்தேன். பயிற்சியாளர் இலக்கிய பித்தன் தந்த உற்சாகத்தால் 'டாக் ேஷா'வில் பேச வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் தொடர்ந்து தமிழும், பேச்சும் என் உயிர்மூச்சு என பேசி வருகிறேன்.கல்யாண மாலை நிகழ்ச்சியில் பேசியதை பார்த்து, எந்த தொடர்பும் இல்லாமல் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த என் அத்தைக்கு உறவினர்கள் 'இவன் உங்க அண்ணன் பையன்' என்று கூற, சந்தோஷத்தில் தேடி வந்து அவரது மகள் மகாலட்சுமியை எனக்கு திருமணம் செய்து வைத்தார். ஒருபக்கம் வழக்கறிஞர் தொழில். மறுபுறம் பேச்சு என ஓடிக்கொண்டிருக்கிறேன். பேசுவதற்காக வெளியூர் செல்லும் சமயங்களில் என் வழக்கறிஞர் தொடர்பான பணியை குமாஸ்தாவான அப்பா கிரி பார்த்துக்கொள்கிறார்.

பட்டிமன்றங்களில் தொடர்ந்து மதுரை முத்து வாய்ப்பு கொடுத்தார். சாலமன் பாப்பையா, ராஜா போன்றோரின் பட்டி மன்றங்களிலும் வாய்ப்பு கிடைத் தது. கல்யாண மாலையில் தொடர்ந்து பேச அதன் நிர்வாகி மீரா நாகராஜனும் ஒரு காரணம்.

தலைப்பு கொடுத்ததும் அதற்காக சின்ன சின்ன விஷயங்களுடன் நகைச்சுவையாக தயார் ஆகிறேன். சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் பேசுவதுதான் என் பாணி. 'நல்லவன் யார்' தலைப்பில் நான் பேசிய பேச்சு பல ஆயிரம் பேரை சென்றடைந்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.

குடியரசு தின விழாவையொட்டி டில்லி தமிழ்ச்சங்கம் நடத்திய பட்டிமன்றத்தில் பேசினேன். பிறகு பழைய பார்லிமென்ட் கட்டடத்திற்கு என்னையும், என் குழுவினரையும் சிறப்பு அனுமதி பெற்று அழைத்துச்சென்றனர். இது தமிழுக்கு கிடைத்த பெருமைதானே.

நாம் கல்வியோடு நமது திறமையை கண்டறிந்து வளர்த்துக் கொண்டால் அது உங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும். தமிழில் பேசினாலும், படித்தாலும் அது நம்மை சாதிக்க வைக்கும். வாழ்க்கையை உயர்த்தும். அதற்கு நானே உதாரணம்.

புத்தகங்களை வாசியுங்கள். மக்களிடம் பழகுங்கள். அவர்கள் குறித்து இயல்பாக பேசுங்கள். அதுதான் பேச்சாளரின் அடிப்படை தகுதிகள் என்றார்.

இவரிடம் பேச 89738 68461

Advertisement