பா.ஜ., அதிருப்தி தலைவர் எத்னாலுக்கு மேலிடம் நோட்டீஸ்! 72 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க 'கெடு'
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852001.jpg?width=1000&height=625)
கடந்த 2023ல் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் முடிந்து, பா.ஜ., ஆட்சியை இழந்த போது, தோல்விக்கு பொறுப்பேற்று, மாநில தலைவர் பதவியை நளின்குமார் கட்டீல் ராஜினாமா செய்தார். தலைவர்கள் பலரும், மாநில தலைவர் பதவி மீது, கண் வைத்தனர்.
அசோக், பசனகவுடா பாட்டீல் எத்னால், அரவிந்த் லிம்பாவளி, பசவராஜ் பொம்மை உட்பட பலர் பதவியை எதிர்பார்த்தனர். ஆனால் பா.ஜ., மேலிடம், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை, மாநில தலைவர் பதவியில் அமர்த்தியது. இது, கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது.
குறிப்பாக, தனக்கே பதவி கிடைக்கும் என நம்பியிருந்த பசனகவுடா பாட்டீல் எத்னால், பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். மாநில தலைவர் பதவி கை நழுவியதால், எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கலாம் என, எதிர்பார்த்தார். ஆனால், அந்த பதவியும் அசோக் வசமானது.
'ஹிந்து பயர் பிராண்ட் என, பெயர் பெற்றிருந்தும் தனக்கு மாநில தலைவர் பதவியோ, எதிர்க்கட்சி தலைவர் பதவியோ கிடைக்கவில்லையே' என, பொருமினார்.
தன்னை விட வயது மற்றும் அரசியல் அனுபவத்தில் குறைந்தவரான விஜயேந்திராவை தலைவராக ஏற்க எத்னால் தயாராக இல்லை. அன்று முதல் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
மேலும், 'பா.ஜ.,வில் முதல்வர் பதவியில் அமர, 2,000 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். என்னிடம் பணம் இல்லாததால் முதல்வர் ஆக முடியவில்லை' என, குற்றம்சாட்டினார். மற்றொரு முறை, 'காங்கிரஸ் அரசை கவிழ்க்க, எங்கள் கட்சியில் ஒருவர் 1,000 கோடி ரூபாய் தயார் செய்து வைத்துள்ளார்' எனக் கூறி, சர்ச்சையை ஏற்படுத்தினார்.
எத்னாலின் பேச்சை அஸ்திரமாக பயன்படுத்திய காங்கிரஸ் தலைவர்கள், பா.ஜ.,வை விமர்சித்தனர். 'காங்., அரசை கவிழ்க்க 1,000 கோடி ரூபாய் தயார் செய்திருப்பது யார் என்பது குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும்' என, காங்., தலைவர்கள் வலியுறுத்தினர்.
அப்போதே எத்னால் மீது, மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என, தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எடுக்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இதற்கிடையே எத்னால், தன்னுடன் கோஷ்டி சேர்த்து கொண்டு, 'விஜயேந்திராவை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும்' என, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்தார். மற்றொரு புறம் விஜயேந்திராவுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டி உருவானது. இந்த கோஷ்டி, 'எத்னாலை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்' என, பிடிவாதம் பிடித்தது.
கர்நாடக பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலை, மேலிடமும் கவனித்து வந்தது. டில்லி சட்டசபை தேர்தல் இருந்ததால், பொறுமையாக இருந்தனர்.
தேர்தல் முடிந்து, அங்கு பா.ஜ., ஆட்சிக்கு வந்துள்ளது. இதனால், கர்நாடக பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரி செய்வதில் ஆர்வம் காட்டினர். நேற்று முன்தினம், விஜயேந்திரா, எத்னாலுக்கு அவசர அழைப்பு வந்ததால், அவர்கள் டில்லிக்கு சென்றனர்.
மாநில தலைவர் மாற்றம் குறித்து, ஆலோசிக்க அழைப்பு விடுத்திருக்கலாம் என, கருதப்பட்டது. ஆனால் எத்னாலுக்கு, மேலிட உத்தரவுப்படி, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அளித்துள்ளது.
அதில், 'கட்சி தலைவர்களை பற்றி, பகிரங்கமாக விமர்சித்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து இதேபோன்று பேசுவதை கட்சி கவனித்து வருகிறது. இதற்கு முன் நோட்டீஸ் அனுப்பிய போதும், நீங்கள் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து கட்சி ஒழுங்கை மீறுகிறீர்கள். உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?
'இந்த நோட்டீஸ் கிடைத்த 72 மணி நேரத்துக்குள், ஒழுங்கு நடவடிக்கை குழு முன் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் விளக்கம் அளிக்கா விட்டால், நீங்கள் கூற எதுவும் இல்லை என, மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவுக்கு வந்து, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும்' என, எச்சரித்துள்ளது.
முதல் முறை நோட்டீஸ் அளித்த போது அலட்சியப்படுத்திய எத்னாலை, இரண்டாவது நோட்டீசில், மேலிடம் சில அம்சங்களை சுட்டிக்காட்டி கடுமையாக எச்சரித்துள்ளது. எத்னால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பாரா, விளக்கம் அளிக்கா விட்டால் ஒழுங்கு கமிட்டி என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையில், டில்லி சென்றுள்ள மாநில தலைவர் விஜயேந்திரா, மேலிடத்தின் சில தலைவர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்
-
டாக்டர்களே இல்லை! அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
-
பஞ்சாப் அரசுக்கு சிக்கலா: முதல்வர், எம்.எல்.ஏ.,க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை
-
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி!
-
கட்டண உயர்வுக்கு கண்டனம்; பெங்களூருவில் மெட்ரோ ரயில்களை புறக்கணிக்கும் பயணிகள்
-
ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க விரும்பிய எலான் மஸ்க்: பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மென்