பஞ்சாப் அரசுக்கு சிக்கலா: முதல்வர், எம்.எல்.ஏ.,க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை

5

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகள் கூறியுள்ளன. இச்சூழ்நிலையில், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.

டில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வந்தது. சமீபத்தில் நடந்த புதுடில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகள் கூறி வருகின்றன. சில எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளனர் என காங்கிரஸ் கூறியுள்ளது. சில எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பஞ்சாப் பிரச்னை குறித்தும், 2027 ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும், டில்லி சட்டசபை தேர்தல் தோல்வி குறித்தும் ஆலோசனை கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். கெஜ்ரிவால் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், டில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன், ஆம் ஆத்மியின் பஞ்சாப் எம்.எல்.ஏ.,க்கள் 91 பேர், எம்.பி.,க்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாபை சேர்ந்த ஆம் ஆத்மியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


கூட்டத்திற்கு பிறகு பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் கூறியதாவது: டில்லிக்கு எத்தனை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர் என காங்கிரஸ் கட்சியினர் எண்ணிப் பார்க்கட்டும். மற்ற மாநிலங்களை விட பஞ்சாபின் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. எல்லையில் உள்ள மாநிலமாக உள்ளதால், கூடுதல் முயற்சி போட்டு வருகிறோம். டில்லியில் பிரசாரம் செய்ததற்காக அவர் எங்களுக்கு நன்றி தெரிவித்தார். கல்வி மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் மக்களின் நலனுக்காக பஞ்சாப் அரசு பணியாற்றி வந்துள்ளது. இதனை இன்னும் வேகப்படுத்த வேண்டும். தேர்தலில் வெற்றி தோல்வி ஒரு அங்கம். தங்களுக்காக பணியாற்றியவர்கள் என எங்களை டில்லி மக்கள் நினைவில் வைத்து இருப்பார்கள். பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. பஞ்சாபை சிறந்த மாநிலமாக மாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement