கார்கேவுடன் அரசியல் பேசவில்லை: பரமேஸ்வர்

பெங்களூரு: புதுடில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், 'வாஷ் அவுட்' ஆனதை அடுத்து, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று முன்தினம் பெங்களூரு வந்திருந்தார். சதாசிவ நகரில் உள்ள அவரது வீட்டுக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் சென்றார். 45 நிமிடங்கள் இருவரும் பேசினர்.

தலித் மாநாடு நடத்துவதற்காக, ஆலோசனை கூட்டம் நடத்த பரமேஸ்வர் எடுத்திருந்த முயற்சிக்கு, துணை முதல்வர் சிவகுமார், மேலிடத்திடம் கூறி, முட்டுக்கட்டை போட்டார். இதனால் இக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இக்கூட்டத்தை நடத்துவது தொடர்பாகவும், டில்லி தேர்தல் முடிவால், கர்நாடகாவில் தலைமை மாற்றம் குறித்தும் விவாதித்ததாக கூறப்பட்டது.

பின்னர், பரமேஸ்வர் அளித்த பேட்டி:

எங்கள் குடும்பமும், கார்கே குடும்பமும் ஒன்று தான். அவர் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். நாங்கள் சந்திக்கும் போது, எங்கள் குடும்பம் தொடர்பாக பேசுவோம். அனைத்து நேரத்திலும் அரசியல் பற்றி பேசுவதில்லை.

அவரை சந்திப்பதில் எந்த ரகசியமும் இல்லை. அரசியல் பற்றி பேசியிருந்தால் ஆமாம் என்று கூறுவேன். ஆனால் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க புதுடில்லி செல்வேன். அதற்காக தவறான கற்பனைக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடுவதை யாரும் தடுக்கவில்லை. அறிக்கை தொடர்பாக இன்னும் விவாதிக்க வேண்டி உள்ளது. முதல்வருக்கு உடல் நலம் சரியில்லாததால், அமைச்சரவை கூட்டத்தை தள்ளி வைத்துள்ளார். வரும் 17ம் தேதி சாம்ராஜ் நகர் மலை மஹாதேஸ்வரா மலையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement