இறந்த நபர் உயிர் பிழைப்பு அஞ்சலி போஸ்டர் கிழிப்பு

1

ஹாவேரி: உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்த நபரை, வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது உயிர் பிழைத்த சம்பவம், ஹாவேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹாவேரி மாவட்டம், ஷிகானின் பங்காபுராவைச் சேர்ந்தவர் பிஷ்டப்பா குடிமணி, 45. ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நான்கு நாட்களுக்கு முன்பு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, நேற்று டாக்டர்கள் அறிவித்தனர். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அழுது புலம்பினர்.

இத்தகவல் உறவினர்களுக்கும், கிராமத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

பிஷ்டப்பா உடலை, ஆம்புலன்சில் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். வாகனத்தில் மனைவி, இரு மகன்கள் இருந்தனர். அப்போது அவரின் இளைய மகன், 'அப்பா அங்கு பாருங்கள். நீங்கள் விரும்பி சாப்பிடும் தாபா ஹோட்டல் வந்துவிட்டது; எழுந்திருங்கள் அப்பா...' என்று அழுதபடி கூறியுள்ளார்.

இதை கேட்ட பிஷ்டப்பா, 'ஹா...' என்று கூறி மூச்சை இழுத்து விட்டார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ஆம்புலன்சை நிறுத்தி, உடனடியாக ஷிகானில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்குள்ள டாக்டரிடம் விஷயத்தை கூறினர். இரண்டு மணி நேரம் செயற்கை சுவாச கருவி பொருத்தும்படி, செவிலியரிடம் டாக்டர்கள் கூறியுள்ளனர். இரண்டு மணி நேரத்துக்கு பின், தீவிர சிகிச்சைக்கு கிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தனர்.

அதே ஆம்புலன்சில், கிம்ஸ் மருத்துவமனைக்கு பிஷ்டப்பா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர், உயிர் பிழைத்ததால், குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், பிஷ்டப்பா இறந்து விட்ட தகவல் அறிந்ததும் உறவினர்கள் சிலர், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பிரின்ட் செய்து, கிராமத்தில் ஒட்டினர்.

அத்துடன் சிலர் வாட்ஸாப், எக்ஸ் சமூக வலைதளங்களிலும் அவரின் படத்தை பதிவேற்றம் செய்து, இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தனர்.

அவர் உயிர் பிழைத்த தகவல்கள் அறிந்ததும் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டிருந்த படங்கள், இரங்கல் பதிவுகள் அகற்றப்பட்டன.

Advertisement