டிராக்டர் மீது பஸ் மோதல்: சிறுமி பலி; 20 பேர் காயம்

புவனகிரி; கீரப்பாளையம் அருகே டிராக்டர் மீது, தனியார் பஸ் மோதியதில் சிறுமி இறந்தார். 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி பள்ளித்தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகதீஷ். இவரின் 5 வயது மகள் கவிநிஷா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் டிராக்டரில் விறகு ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்றார். டிராக்டரை ஜெகதீஷ் ஓட்டினார்.

இரவு 8.30 மணி அளவில் கீரப்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது, பின் தொடர்ந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் டிராக்டரில் இருந்த மூவர், பஸ் பயணிகள் உட்பட 20 பேர் காயம் அடைந்தனர். இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்தினால் நேற்று இரவு அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புவனகிரி வழியாக இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் புறவழிச் சாலையில் திருப்பி விடப்பட்டன.

சாலையில் கவிழ்ந்த டிராக்டரை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினர். விபத்து குறித்து புவனகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement