திரிவேணி சங்கமத்தில் துவங்கியது கும்பமேளா

மைசூரு: மைசூரில் மூன்று நாள் கும்பமேளா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

தெற்கு காசி என்று அழைக்கப்படும் மைசூரு மாவட்டம், டி.நரசிபுராவில் உள்ள திரிவேணி சங்கமத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடப்பது வழக்கம். மூன்றாண்டுக்கு பின், நேற்று கும்பமேளா துவங்கியது.

அதிகாலை 5:30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் மற்றும் ஸ்ரீ குஞ்சா நரசிம்ம சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பெங்களூரு ஸ்ரீ கைலாஷ் ஆசிரமம் மஹா சமஸ்தானத்தின் ஸ்ரீ ஜெயேந்திர பூரி மஹா சுவாமிகள், மைசூரு கிளை ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி ஸ்ரீ சோமநாதேஸ்வர சுவாமிகள், மைசூரு கிளை காகிநெலே மடாதிபதி ஸ்ரீ புருஷோத்தமானந்தபுரி சுவாமிகள் ஆகியோர் கொடியேற்றி, கும்பமேளாவை துவக்கி வைத்தனர்.

படகில் பயணம்



பின், படகில் பயணித்த மடாதிபதிகள், நதியின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த கருட கம்பத்திற்கு பூஜை செய்தனர். மடாதிபதிகள் உட்பட பக்தர்களும் நதியில் புனித நீராடினர்.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர்.

கலெக்டர் லட்சுமிகாந்த ரெட்டி, எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் ஆகியோர், பக்தர்கள் குளிக்கும் பகுதியில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

நதியின் மத்திக்கு மடாதிபதிகள், வி.வி.ஐ.பி.,க்கள் சென்று பூஜை செய்வதற்காக, ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் இருந்து மூன்று படகுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இது தவிர, தீயணைப்பு படையினரும், தங்கள் படகுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அணை திறப்பு



ஆழமான பகுதிகளுக்கு பக்தர்கள் செல்லக்கூடாது என்பதற்காக நதியில் குறிப்பிட்ட பகுதியில் தடுப்புகள் அமைத்திருந்தனர். பக்தர்கள் புனித நீராட, கபினி அணியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

'புனித நீராடும் போது யாரும் சோப்புகளை பயன்படுத்த வேண்டாம்; ஆடைகளை கரையில் போட வேண்டாம்' என்று தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்ட வண்ணம் இருந்தனர். நதிக்கரையில் குளிக்கும் போது, ஆடைகளை கரையில் வீசுவதை அகற்ற, ஆங்காங்கே தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குளிக்கும் பகுதியில் நெரிசல் ஏற்படாத வகையில், உள்ளே வரவும், வெளியேறவும் தனித்தனி பகுதிகள் மற்றும் ஆடை மாற்றும் பகுதிகள், நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கும்பமேளா பாதுகாப்பு பணியில், 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மைசூரு, சாம்ராஜ் நகரில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, தனி ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் செய்துள்ளனர்.

காவிரி ஆரத்தி



கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி கூறுகையில், ''வாரணாசியில் கங்கா ஆரத்தி நடத்துவது போன்று, இன்று திரிவேணி சங்கமத்தில் காவிரி ஆரத்தி நடக்கிறது.

மாலை 6:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கும் நிகழ்ச்சிக்கு, காசியில் இருந்து சிறப்பு குழுவினர் வருகை தந்துள்ளனர்.

''மூன்று நாட்கள் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, மூன்று இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மைசூரு கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

Advertisement