போக்குவரத்து சந்திப்புகளை அழகாக்கும் பெங்., மாநகராட்சி

பெங்களூரு: வாகன போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சந்திப்புகளில், வாகன பயணியரின் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், 25 சந்திப்புகளை மேம்படுத்தும் பணியை, பெங்களூரு மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

நகரின் முக்கியமான பகுதிகளில் மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.

ஊஞ்சல்கள்



குறிப்பாக நெரிசல் மிகுந்த வேளைகளில் வாகனம் ஓட்டும்போது, எரிச்சல் ஏற்படும். இதற்கு தீர்வு காண, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதிக போக்குவரத்து நெருக்கடி உள்ள சந்திப்புகளை மேம்படுத்துகிறது. பசுமை தோட்டங்கள், செயற்கை நீருற்றுகள் அமைக்கப்படுகின்றன. எல்.இ.டி., விளக்குகள் பொருத்தி அழகுபடுத்துகிறது. சில சந்திப்புகளில் ஊஞ்சல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றை பார்க்கும்போது வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைவர். அவர்களின் மனமும் லேசாகும்.

ஓராண்டுக்கு முன்பு, 'பிராண்ட் பெங்களூரு' திட்டத்தின் கீழ், பணிகள் துவங்கின. முதற்கட்டமாக ரேஸ்கோர்ஸ் சாலை, சிவானந்த சதுக்கம் மேம்படுத்தப்பட்டுஉள்ளன.

அலங்கார இருக்கை



ரேஸ்கோர்ஸ் சாலையில் பாதசாரிகள், அலுவலகம் செல்வோர் அமர்ந்து ஓய்வெடுக்க, அலங்கார இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement