காட்டு யானை அருகில் வீடியோ வாலிபருக்கு ரூ.25,000 அபராதம்

சாம்ராஜ்நகர்: பண்டிப்பூரில் காட்டு யானை அருகில் சென்று புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிக்கு, வனத்துறை அதிகாரிகள், 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டை சேர்ந்தவர் ஹமீது. சில நாட்களுக்கு முன், நண்பர்களுடன் ஊட்டிக்கு காரில் சென்றிருந்தார். மீண்டும் ஊருக்கு கிளம்பியவர்கள், குண்டுலுபேட் - ஊட்டி சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பண்டிப்பூரில், உணவு தேடி காட்டு யானை ஒன்று, சாலையில் நின்றிருந்தது. இதை பார்த்த நண்பர்கள், வாகனத்தை நிறுத்தினர். இவர்களில் ஹமீது என்பவர் மட்டும், காரில் இருந்து இறங்கி, யானை அருகில் சென்று கூச்சலிட்டார்.

இதை வீடியோவாக சமூக வலைளதத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இதற்கு பொது மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, கருத்து பதிவிட்டிருந்தனர். வனத்துறையினரின் கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றனர்.

இந்த வீடியோவை பார்த்த வனத்துறையினர், அந்நபரை கண்டுபிடித்து 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்திய ஹமீது மூலமாகவே, பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ பதிவேற்றம் செய்தனர்.

அதில், ஹமீது பேசுகையில், ''பண்டிப்பூர் தேசிய பூங்காவில் யானை அருகில் புகைப்படம், வீடியோ எடுத்தேன். அதற்காக, 25,000 ரூபாய் அபராதம் செலுத்தி உள்ளேன்.

''பண்டிப்பூர் வனப்பகுதியில் பிளாஸ்டிக்கை வீசுவது, வாகனங்களை நிறுத்துவது, வீடியோக்கள், புகைப்படங்கள் எடுப்பது தவறு. என்னை போன்று யாரும் தவறு செய்ய வேண்டாம்,'' என வலியுறுத்தி உள்ளார்.

காட்டு யானை அருகில் சென்று வீடியோ எடுத்த வாலிபர்.

Advertisement