மாணவியிடம் ஆபாசமாக பேசிய இருவர் கைது..
திண்டிவனம்: தனியார் கம்பெனி வேலைக்கு விண்ணப்பித்த கல்லுாரி மாணவியின் மொபைல்போனில் ஆபாசமாக பேசிய ஊழியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 23 வயது மாணவி, அரசு கலைக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு முதுகலை பட்டப் படிப்பு படித்து வருகிறார். இவர், திண்டிவனம்-சென்னை சாலையிலுள்ள தனியார் கம்பெனியில் பகுதி நேர வேலைக்கு பயோ-டேட்டா அனுப்பியிருந்தார்.
அதில் இருந்த மாணவியின் மொபைல் போன் எண்ணை எடுத்து, அதே கம்பெனியில் வேலை செய்து வரும் ஊழியரான, திண்டிவனம் அடுத்த கீழ்காரணை கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன், 34; இவரது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த சந்துரு, 24; ஆகிய இருவரும் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து கல்லுாரி மாணவி, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதா ஆகியோர், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாண்டியராஜன், சந்துரு மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்துப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.