ஒரே பைக்கில் 5 பேர் பயணம் அரசு பஸ் மோதி மாணவர் பலி

4

கடலுார்: குறிஞ்சிப்பாடி அருகே 5 பேர் பயணம் செய்த பைக் மீது, அரசு பஸ் மோதியதில் பிளஸ் 2 மாணவர் இறந்தார். காயமடைந்த நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கேசவநாராயணபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் சுனில்ராஜ்,17; குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று காலை, அதே ஊரைச் சேர்ந்த மோகன்ராஜ்,31; என்பவருடன் குறிஞ்சிப்பாடிக்கு ஸ்ப்ளண்டர் பைக்கில் சென்றார்.

பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்த அதே ஊரை சேர்ந்த பிளஸ் 1 மாணவி சாந்தினி, பத்தாம் வகுப்பு மாணவிகள் சந்தியா,15; பவித்ரா,15; ஆகியோரும் அதே பைக்கில் குறிஞ்சிப்பாடிக்கு சென்றனர்.

குறிஞ்சிப்பாடி, கஞ்சமநாதன்பேட்டை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சுனில்ராஜ், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மோகன்ராஜ், சாந்தினி, சந்தியா, பவித்ரா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். மோகன்ராஜ், பவித்ரா சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும், சாந்தினி, சந்தியா கடலுார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement