சிவன்மலையில் தைப்பூச தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் இழுத்தனர்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852237.jpg?width=1000&height=625)
காங்கேயம்: காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் துவங்கியது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் இழுத்தனர்.
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா கடந்த வாரம் வீரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வீரகாளியம்மன் திருவுலா காட்சி, வீரகாளியம்மன் தேர்த்திருவிழா, வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, அடிவாரம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சாமி எழுந்தருளல், மைசூர் பல்லக்கில் சாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி, திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 3:30 மணிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால், சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வேல் மற்றும் சேவற்கொடி கொண்டு, தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காலை 6:00 மணிக்கு மகர புஷ்ய நல்வேலையில் சுவாமி இரதத்திற்கு எழுந்தருளினார். மாலை 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் கலெக்டர் கிருஸ்துராஜ், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேயசிவசேனாபதி, உதவி ஆணையர் தனசேனர், திருப்பூர் இந்துசமயஅறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டின், தாராபுரம் கோட்டாச்சியர் பெலிக்ஸ்ராஜா, சிவன்மலை உதவி ஆணையர் இரத்தினாம்பாள், திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், எஸ்.பி., யாதவ்கிரிஷ்அசோக், காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுக்க பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் கிரிவல பாதையில், அசைந்தாடியபடி, திருத்தேர் உலா வந்தது. 200 மீட்டர் தூரம் இழுக்கப்பட்டு நடு வீதியில் மாலை 4:50 மணிக்கு தேர் நிலை நிறுத்தப்பட்டது.
இன்றும், நாளையும் கிரிவல பாதையை தேர் சுற்றி வந்து, தேர் நிலைக்கு வரும். இந்த தேரோட்டத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை, காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், தாராபுரம், பல்லடம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் காவடி, தீர்த்தக்குடம் எடுத்தும் பாத யாத்திரையாகவும் வந்து வழிபட்டனர். இந்த தேர்த் திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்களை கண்காணிக்க 100 சிசிடிவி கேமிரப்பெருத்தபட்டு கண்காணிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன், ஞானபிரகாஷ், லயேலாஇன்னாசிமேரி, உள்பட்ட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.