வழிப்பறி செய்த வாலிபர் கைது
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852570.jpg?width=1000&height=625)
விருதுநகர்:துாத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு, திருட்டு டூவீலரில் விருதுநகரில் இருந்து தப்பிச்சென்ற பழநியைச் சேர்ந்த சுரேஷை 26, வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர், திருட்டு டூவீலரில் தப்பிச் சென்றதாக விருதுநகர்மாவட்ட போலீசாருக்கு பிப். 9ல் தகவல் கிடைத்தது.
விருதுநகர் பட்டம்புதுார் அருகே சந்தேகப்படும்படி டூவீலரில் சுற்றி திரிந்தவர்களை ஆர்.ஆர்., நகரில் வச்சக்காரப்பட்டி போலீசார் பிடித்தனர்.பிடிப்பட்டவரில் சுரேஷ் தப்பிச்சென்றார். மற்றொருவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணிபுரியும் கூமாபட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி 33, என்பதும்,இவர் உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததும், அதில் 5 தோட்டாக்கள் இருப்பதும், இவர் மீது ஏற்கனவே வத்திராயிருப்பு ஸ்டேஷனில் மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிந்தது. இவரை நேற்று முன்தினம் கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தனர். இவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., கண்ணன் உத்தரவிட்டார்.
மேலும் போலீசாரிடம் இருந்து தப்பிச்சென்ற திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த சுரேஷ, ஆர்.ஆர்., நகர் அருகே எத்திலப்பன்பட்டியில் இருந்து டூவீலரை திருடி தனது காதலியுடன் பழநிக்கு சென்றார்.இவரின் அலைபேசி இருப்பிடத்தை ஆராய்ந்து நேற்று போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.
இவரிடம் இருந்து டூவீலரை பறிமுதல் செய்து 35 பவுன் நகை குறித்து விசாரித்து வருகின்றனர்.