வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூச ஜோதி தரிசனம்

பொன்னேரி:தைப்பூசத்தினை முன்னிட்டு, நேற்று, பொன்னேரி அடுத்த, ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி, பெரும்பேடு முத்துகுமாரசாமி, குமரஞ்சேரி முருகன் ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.

பொன்னேரி அகத்தீஸ்வர், திருப்பாலைவனம் பாலீஸ்வரர், மீஞ்சூர் ஏகாம்பரநாதர், திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவில்களில் உள்ள முருகன் சன்னிதிகளில் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.

பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராத்தில், திருஅருட்பிரகாச வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் இல்லம் அமைந்து உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று, அகவல் உணர்ந்தோதுதல், சன்மார்க்க நீதிக்கொடி உயர்த்துதல், சத்திய ஞானசபை தீபவழிபாடு, அருட்பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில், நுாற்றுக்கணக்கான சன்மார்க்க மெய்யன்பர்கள் பங்கேற்று, வள்ளலார் ஞானசபையில் ஜோதி தரிசனம் பெற்றும், தியானம் செய்துவிட்டும் சென்றனர். பங்கேற்ற மெய்யன்பர்களுக்கு, வள்ளலார் தாயார் சின்னம்மையார் அறக்கட்டளை சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.

திருத்தணி

திருத்தணி, பெரியார் நகரில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் கோவிலில், நேற்று, தைப்பூசத்தையொட்டி ஜோதி தரிசனம் நடந்தது. இதையொட்டி, காலை 7:30 மணிக்கு சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டு, காலை 8:00 மணிக்கு தீபாராதனையும், அகவல் பாராயணம் நடந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.

அப்போது அங்கு கூடியிருந்த, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அருப்பெரும்ஜோதி, அருப்பெரும்ஜோதி என முழக்கமிட்டனர். பின், பக்தர்கள் ஜோதி தரினத்தை கண்டு மகிழ்ந்தனர்.

மதியம் 2:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை பஜனை மற்றும் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. மாலை 7:00 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement