சிவகார்த்திகேயன் பராசக்தியா? சிவாஜி ரசிகர்கள் கொதிப்பு

சென்னை:நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு, பராசக்தி பெயர் சூட்டுவதற்கு, சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

நடிகர் சிவாஜி நடிப்பில், 1952ல் வெளியான படம் பராசக்தி. இப்படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள், இன்றளவும் ரசிகர்களிடையே பேசுபொருளாக உள்ளன.

புதிதாக நடிக்க வருவோருக்கு, சிவாஜி பேசும் பராசக்தி பட வசனம்தான், பயிற்சிப் பட்டறையாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பழைய படங்களின் தலைப்பை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், சிவாஜி நடித்த, பராசக்தி படத்தின் தலைப்பை, அப்படியே சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடிக்க, சுதாகொங்கரா இயக்கும் படத்திற்கு பயன்படுத்தி, முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

இது, சிவாஜி ரசிகர்கள் இடையே ஆத்திரத்தை கிளப்பியது. இதற்கு முன் தமிழ் சினிமாவில், பல படங்களில், பராசக்தி பெயரை தலைப்பில் பயன்படுத்தினாலும் அதில், மீண்டும் பராசக்தி, ஆதிபராசக்தி என்றே பயன்படுத்தினர்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு, பராசக்தி என தலைப்பு வைத்ததற்கு, சிவாஜி ரசிகர் மன்றத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று சென்னை முழுதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில், 'நுாறு ஆண்டு ஆனாலும் ஒரே பராசக்தி தான். தமிழ் சினிமா வரலாற்றின் அடையாளத்தை காப்போம்' என்று கூறி உள்ளனர்.

முன்னதாக படத்தின் தலைப்புக்கு சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனிடையே விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் படத்திற்கு, சக்தித் திருமகன் என்று பெயர் வைத்தனர் இதன் மற்ற மொழிகளுக்கு, பராசக்தி என்று தலைப்பு வைத்தனர்.

இதுகுறித்து விஜய்ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பாளர்கள் கூடி பேசி சமரச தீர்வு கண்டனர்.

தற்போது வரை சிவகார்த்திகேயன் படத்திற்கு, பராசக்தி என்ற தலைப்பு உறுதியான நிலையில், அதை மாற்றும்படி சிவாஜி ரசிகர்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

Advertisement