கானத்துார் ரெட்டிகுப்பத்தில் 34 மாடி குடியிருப்பு அமையுது

சென்னை,சென்னையில் பழைய மாமல்லபுரம் சாலையில், ஏகாடூர் உள்ளிட்ட பகுதிகளில், அதிக உயரமான அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, 26 முதல், 30 மாடிகள் வரையிலான உயரத்தில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

இதில், அனைத்து கட்டடங்களும், பஹிங்காம் கால்வாய்க்கு மேற்கில் தான் அமைந்துள்ளன. இந்த கால்வாய்க்கு கிழக்கில், இ.சி.ஆர்., சாலையை ஒட்டி அதிக உயரமான கட்டடங்கள் கட்ட அனுமதி கிடைப்பதில்லை.

இந்நிலையில், கானத்துார் ரெட்டிகுப்பம் பகுதியில், 34, 33 மாடிகள் கொண்டதாக மூன்று பிளாக்குகளாக அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, 'அட்லிஸ் புராப்பர்ட்டீஸ்' நிறுவனம் முடிவு செய்தது. இங்கு, 5.86 ஏக்கர் நிலத்தில், 317 வீடுகளுடன் அமைக்கப்படுகிறது.

இப்பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியாக வருவதால், இதற்கு தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை குழுமத்திடம் ஒப்புதல் கோரி, கட்டுமான நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இதுகுறித்து, கடலோர ஒழுங்குமுறை குழுமத்தின் தொழில்நுட்ப குழு எழுப்பிய கேள்விகளுக்கு, கட்டுமான நிறுவனம் பதில் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதல் அளிப்பது குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement