நாளை முதல் விதிப்படி தான் வேலை வருவாய் அலுவலர்கள் தடாலடி அறிவிப்பு வருவாய் அலுவலர்கள் தடாலடி அறிவிப்பு

மதுரை:''அதீத பணி அழுத்தம் மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முதல் விதிப்படியே வேலை செய்வோம்,'' என, தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகையன் கூறினார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:

வருவாய்த் துறையில் போதிய அவகாசம் தராமல், பணிகளை உடனே முடிக்கும்படி கூறுகின்றனர். இதனால், அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுகிறது.

மேலும், அடிப்படை கட்டமைப்பும் இல்லை. எல்லாமே ஆன்லைனில் நடந்தாலும், தாலுகா அலுவலகத்தில் இணைய வசதி கிடையாது.

வருவாய் ஆய்வாளர் முதல் அனைவருமே, மொபைல் போனில் தான் செயல்படுகின்றனர். லேப்டாப், பிரின்டர், ஸ்கேனர், சர்வர், வைபை வசதி என, எதுவும் இல்லை. அரசிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, பிப்ரவரி, 13 முதல் தினமும் விதிப்படி வேலை என, காலை, 10:00 முதல் மாலை, 5:45 மணி வரையே பணியாற்றுவது என, முடிவு செய்து உள்ளோம்.

பிப்., 18 அன்று மாலை ஒரு மணிநேர வெளிநடப்பு செய்து, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.




ஏன் இந்த முடிவு?




வருவாய்த் துறையில், இ.பி.எம்.எஸ்., எனப்படும், 'எலக்ட்ரானிக்ஸ் புரமோஷன் மேனேஜிங் சிஸ்டம்' என்ற திட்டத்தின் கீழ், கடும் நெருக்கடி ஏற்படுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர். துறையில் கிராம உதவியாளர்கள் முதல் தாசில்தார்கள் வரை பணிகளில் பதவி உயர்வு வழங்க, ஊழியர்களின் பணிப்பதிவேடை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 30 ஆண்டுகள் பணியாற்றும் ஒரு ஊழியருக்கே பதிவேற்றம் செய்ய, மூன்று மணி நேரத்திற்கும் மேலாகிறது. ஆனால், மாநில அளவில் பணியாற்றும், 50,000க்கும் மேற்பட்டோர் விபரங்களை நான்கைந்து நாட்களில் பதிவேற்றம் செய்ய நெருக்கடி கொடுப்பதாக புலம்புகின்றனர்.


அதே சமயம் பதிவேற்றம் செய்யும் மென்பொருளில் தொழில்நுட்ப ரீதியாக நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன. நகர்ப்புறங்களில் பட்டா வழங்க, 15 நாட்கள் அவகாசம் அளிக்கின்றனர். அதை வழக்கமான பணிகளுக்கு இடையே களஆய்வு செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்வதில் கூடுதல் அவகாசம் தேவை. அதை தர மறுக்கின்றனர்.விண்ணப்பம் முதல் அனைத்தும் ஆன்லைனில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அதற்கேற்ற கட்டமைப்பு கிடையாது. வருவாய் ஆய்வாளர் முதலான ஊழியர்களுக்கு லேப்டாப் உட்பட உபகரணங்கள் வழங்கவில்லை. இவற்றை சொந்த செலவில் கவனிக்க வேண்டியுள்ளது என்கின்றனர் வருவாய்த் துறை அலுவலர்கள்.

Advertisement