சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு: அமைச்சர் எச்சரிக்கை
சிங்கப்பூர் “சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளதால், அதை எதிர்கொள்ள மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்” என, அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்து உள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தலைமையில் ஆட்சி நடக்கிறது.
தைப்பூச விழா
இங்குள்ள போர்ட் கேனிங் பகுதியில் உள்ள தண்டாயுதபாணி கோவிலில் நேற்று தைப்பூச விழா நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சண்முகம் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
உள்நாட்டு பாதுகாப்பு சட்டப்படி சிங்கப்பூரைச் சேர்ந்த இளைஞர், இல்லத்தரசி, மலேஷியாவைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவர்களில் கைதான இளைஞர், ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி, தன்னை ஒரு பயங்கரவாதியாக உருவகப்படுத்தி கொண்டு, இங்கு வசிக்கும் சீனர்கள் மற்றும் மலாய்காரர்களுக்கும் இடையே இனப்போரை துாண்டும் வகையில் செயல்பட்டதுடன், இங்குள்ள முஸ்லிம்களை தாக்கவும் திட்டமிட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இதேபோல் கைதான இல்லத்தரசி மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்து வந்ததுடன், அந்த அமைப்பினருடன் தொடர்பு வைத்திருந்ததையும் சிங்கப்பூர் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்து கைது செய்துள்ளது.
அச்சுறுத்தல்
இதில், துப்புரவு பணியாளர், அவரது சொந்த நாடான மலேஷியாவிற்கே நாடு கடத்தப்பட்டார்
இது, நம் நாட்டை அச்சுறுத்தக்கூடிய விஷயமாக மாறியுள்ளது. எனவே, சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் அரங்கேற வாய்ப்புள்ளது. எனவே, இங்கு வசிக்கும் மக்கள் அதை எதிர்கொள்ள தங்களை மனதளவில் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.