ரஞ்சி கோப்பை: தமிழகம் ஏமாற்றம் * அரையிறுதியில் மும்பை அணி

நாக்பூர்: ரஞ்சி கோப்பை காலிறுதியில் தமிழக அணி 198 ரன்னில் விதர்பாவிடம் வீழ்ந்தது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த காலிறுதியில் தமிழகம், விதர்பா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் விதர்பா அணி 353, தமிழகம் 225 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் விதர்பா அணி 169/5 ரன் எடுத்து, 297 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. துபே 64 ரன் எடுத்தார். யாஷ் (112) சதம் அடித்து அவுட்டானார். விதர்பா அணி இரண்டாவது இன்னிங்சில் 272 ரன் எடுத்தது. சாய் கிஷோர் 5 விக்கெட் சாய்த்தார்.
கடின இலக்கு
பின் 401 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது தமிழகம். முகமது அலி (10), ஜெகதீசன் (18), சாய் சுதர்சன் (2), விஜய் சங்கர் (5), பூபதி (0) என வரிசையாக ஏமாற்ற தமிழகம் 45/5 ரன் என திணறியது. பின் வரிசையில் பிரதோஷ் (53), சோனு (57), அரைசதம் அடித்து ஆறுதல் தந்தனர்.
மற்றவர்கள் ஏமாற்ற, தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. தொடரில் இருந்து வெளியேறியது.
மும்பை அபாரம்
கோல்கட்டாவில் நடந்த காலிறுதியில் நடப்பு சாம்பியன் மும்பை, ஹரியானா மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 315, ஹரியானா 301 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் கேப்டன் ரகானே (108) சதம் அடிக்க, மும்பை அணி 339 ரன் குவித்தது. பின் களமிறங்கிய ஹரியானா 201 ரன்னில் ஆல் அவுட்டாகி, தோற்றது. மும்பை அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
ராஜ்கோட்டில் நடந்த மற்றொரு காலிறுதியில் சவுராஷ்டிரா அணி (216, 197), இன்னிங்ஸ், 98 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் (511) தோற்றது.

Advertisement