கேரளாவை உலுக்கிய பாதி விலை மோசடி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852619.jpg?width=1000&height=625)
மூணாறு:கேரளாவில் பாதி விலையில் பொருட்கள் வழங்குவதாக நடந்த மெகா மோசடி வழக்கு குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கோளப்ரா, 7ம் மைல் பகுதியைச் சேர்ந்த அனந்துகிருஷ்ணன் 27. பாதி விலையில் ஸ்கூட்டர், லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்கள் வழங்குவதாக கூறி ரூ. கோடி கணக்கில் மோசடி செய்தார்.
அவரை மூவாற்றுபுழா போலீசார் இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்தனர். மாநிலம் முழுவதும் ரூ.600 கோடி மோசடி நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 6000 புகார்கள் தரப்பட்டதில் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஒப்படைப்பு
இந்த மோசடி வழக்கு குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எர்ணாகுளம் எஸ்.பி. சோஜன் தலைமையில் 81 பேர் கொண்ட குழுவினர் விசாரிக்கின்றனர்.
முதற்கட்டமாக கோட்டயம் மாவட்டத்தில் 3, ஆலப்புழா 8, இடுக்கி 11, எர்ணாகுளம் ஊரக பகுதிகளில் 11, கண்ணூர் நகரில் ஒன்று என 34 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னதாக அனந்துகிருஷ்ணனை கைது செய்த மூவாற்றுபுழா போலீசார், அவரது 21 வங்கி கணக்குகளை முடக்கினர்.
மோசடி தொகையை பயன்படுத்தி கோட்டயம், ஈராட்டுபேட்டை, இடுக்கி கோளப்ரா ஆகிய பகுதிகளில் வாங்கிய நிலம் உள்ளிட்ட சொத்துகளை கண்டறிந்தனர்.
அவரது அலுவலகங்களில் ஆய்வு நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து பூட்டி 'சீல்' வைத்தனர். மூன்று சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.
இடுக்கி மாவட்டத்தில் இம்மோசடி தொடர்பாக நேற்று வரை 1400 புகார்கள் அளிக்கப்பட்டன.வண்டன்மேடு, சக்குப்பள்ளம் ஊராட்சிகளில் ரூ.3 கோடி வரை மோசடி நடந்துள்ளது. அது தொடர்பாக 29 பேர் வண்டன்மேடு போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஷைன்குமார், மூவாற்றுபுழா சிறப்பு கிளை சிறையில் உள்ள அனந்து கிருஷ்ணனை கைது செய்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். குமுளி ஊராட்சி முன்னாள் தலைவர் ஷீபாசுரேஷ். இவரை பாதி விலையில் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு குமுளி பகுதி ஒருங்கிணைப்பாளராக அனந்து கிருஷ்ணன் நியமித்தார். அப்பணி தொடர்பாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது.
தற்போது ஷீபாசுரேஷ் வெளிநாட்டில் உள்ளார். இந்நிலையில் மோசடி தொடர்பாக குமுளி போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதனால் முன் ஜாமின்கோரி ஷீபாசுரேஷ் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் அரசிடம் விளக்கம் கேட்டு, பிப்.18 க்கு வழக்கை ஒத்திவைத்தார்.