கூடலுாரில் ஆதார் திருத்த மையம் இன்றி பொதுமக்கள்- தவிப்பு

கூடலுார், பிப். 12- கூடலுாரில் ஆதார் திருத்த மையம் இன்றி பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். அரசின் உதவித்தொகை பெறுவதற்காக வங்கி கணக்கு துவக்க ஆதார் 'அப்டேட்' செய்ய முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



கூடலுாரில் இ சேவை மையங்கள் உள்ளன. ஆனால் ஆதார் 'அப்டேட்' செய்யவும், பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யவும் முடிவதில்லை. தபால் நிலையத்திலும் அப்டேட் செய்யலாம் என்ற அறிவுப்போடு உள்ளது. ஆதார் தொடர்பான எந்த பணியையும் செய்யவதில்லை.

கூடலுார் மக்கள் ஆதாரில் திருத்தம் செய்ய கம்பத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கம்பத்தில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே திருத்தம் செய்யப்படுகிறது. இதனால் தினந்தோறும் கூடலுாரில் இருந்து கம்பத்திற்கு அலைந்த வண்ணம் உள்ளனர்.

மாணவர்கள் பாதிப்பு



தற்போது பள்ளியில் மத்திய, மாநில அரசின் உதவித்தொகை பெறுவதற்காக மாணவர்கள் வங்கிக் கணக்கை துவக்க அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அப்டேட் செய்தால் மட்டுமே வங்கி கணக்கு துவக்க முடியும் நிலை உள்ளது.

பலரது ஆதாரில் மொபைல் எண் இல்லாமலும் பெயர் மற்றும் முகவரி மாற்றம் இருப்பதாலும் அதை திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தினந்தோறும் மாணவர்கள் பெற்றோரை அழைத்து கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அலைந்து வருகின்றனர்.

வலியுறுத்தல்



மக்கள் தொகை அதிகம் உள்ள கூடலுார் நகராட்சியில் நிரந்தரமாக ஆதார் திருத்த மையம் அமைக்க வேண்டும். தற்போதுள்ள சேவை மையங்களில் ஆதார் திருத்தம் செய்யும் வகையில் வசதிகளை செய்து தர வேண்டும். அவ்வபோது ஆதார் திருத்தங்கள் தொடர்பாக முகாம் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement