மாணவி மரணம்: ரூ.5 லட்சம் நிதியுதவி
சென்னை:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பரிமளா. இவர்களின் மகள் கவிபாலா,12. பள்ளத்துார் கிராமத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் பள்ளியில், திடீரென மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்தார்.
நேற்றுமுன்தினம் பள்ளியில் மாணவர்களுக்கு, தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, 'அல்பெண்ட்சோல்' என்ற குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
அதை சாப்பிட்டதால் மாணவி இறந்தாரா என, மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதை பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ வினாயகம் மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,'அதே பள்ளியில் 380 மாணவர்கள் மாத்திரை சாப்பிட்டுள்ளனர். எனவே, மாத்திரையால் மாணவிக்கு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூற முடியாது. அதற்கானவாய்ப்பும் குறைவு. மாணவி உடற்கூறாய்வு முடிவுகளுக்கு பிறகு, இறப்புக்கான காரணம் தெரிய வரும்' என்றார்.
இந்நிலையில் மாணவி இறப்பை அறிந்த, முதல்வர் ஸ்டாலின், மாணவி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.