ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி வயிற்றில் இறந்த சிசு அகற்றம்
வேலுார்:ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி வயிற்றில் இறந்த சிசுவை அகற்றிய நிலையில், அப்பெண் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரிலிருந்து, சித்துாருக்கு கடந்த, 6ம் தேதி கோவை - திருப்பதி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், 36 வயதுடைய, 4 மாத கர்ப்பிணி, பொதுப்பெட்டியில் பயணம் செய்தார். அப்போது ஹேமராஜ் என்ற வாலிபரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு, வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார்.
இதில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணுக்கு கடந்த, 8ம் தேதி வயிற்றில் இருந்த சிசு இதயத்துடிப்பு நின்று கருச்சிதைவு ஏற்பட்டது.
அதன் பின் ராணிப்பேட்டையிலுள்ள சி.எம்.சி., மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவரின் வயிற்றில் உயிரிழந்த, 4 மாத சிசுவை அகற்றி சிகிச்சை அளித்த நிலையில், அப்பெண் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, வேலுார் கலெக்டர் சுப்புலெட்சுமி கூறுகையில், ''பாதிக்கப்பட்ட பெண்ணின் இடது கால் மற்றும் வலகு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிறுநீரகம், நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டு அதற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை, 4 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. தற்போது அப்பெண் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து நலமாக உள்ளார்,'' என்றார்.