கனிமொழி துவக்கிய திட்டத்திற்கு வனத்துறையினர் தடை விதிப்பு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில், தாமிபரணி ஆற்றில் உள்ள சீமை கருவேலமரங்கள், முட்புதர்களை தனியார் பங்களிப்புடன் அகற்றும் பணியை கனிமொழி எம்.பி., கடந்தாண்டு ஜூலை 6ல் துவக்கி வைத்தார்.

கலியாவூர் மருதுார் அணைப் பகுதியில் எக்ஸ்னோரோ நிறுவனத்தின் வாடகை இல்லா இயந்திரம் மூலம் பணி துவங்கியது.

தொடர்ச்சியாக, ஸ்ரீவைகுண்டம் அணையின் மேல் பகுதியில் புதுப்பாலம் முன் உள்ள தாமிரபரணி ஆற்று பகுதிக்குள் இருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நேற்று துவங்கியது. சிறிது நேரத்தில் அங்கு சென்ற வனத்துறையினர் சீமை கருவேலமரங்கள் அகற்றும் பணிக்கு தடை விதித்தனர்.

வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி பணி நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வெள்ள அபாயத்தை உருவாக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் அவர்கள் முறையிட்டனர்.

வனத்துறையினர் அனுமதிக்காவிட்டால் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என, வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, தாசில்தார் ரத்னசங்கர் மற்றும் அதிகாரிகள் வனத்துறையினரிடம் பேச்சு நடத்தினர்.

அதன் பிறகே வனத்துறையினர் சீமை கருவேல மரங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தொடர்ந்து சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

தாமிரபரணி ஆற்றை துாய்மைப்படுத்தும் முயற்சியாக கனிமொழி எம்.பி., மற்றும் கலெக்டர் துவங்கி வைத்த திட்டத்திற்கு வனத்துறையினர் தடை விதித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement