செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

1

கோபி:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் வீட்டுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்திய, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு, அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்டம், அன்னுார் அருகே பாராட்டு விழா நடந்தது.

இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

'எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்கள், அதற்கான விழா அழைப்பிதழ், பிளக்ஸ் பேனர், டிஜிட்டல் போர்டுகளில் இடம் பெறவில்லை. பாராட்டு விழாவுக்கு செல்லவில்லையே தவிர, பழனிசாமியை புறக்கணிக்கவில்லை' என, விளக்கம் அளித்திருந்தார்.

இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் விளக்கம் அளித்திருந்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் பண்ணை வீட்டுக்கு, ஒரு எஸ்.ஐ., தலைமையில், துப்பாக்கி ஏந்திய இரு போலீசார் நேற்றிரவு முதல் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement