டிஜிட்டல் கைது மோசடி ரூ.1.10 கோடி சுருட்டிய கும்பல்

நொய்டா,
உத்தர பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் சந்திரபான் பாலிவால். இவர் கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்த போது, வீடியோ காலில் தொடர்பு கொண்ட சிலர், அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி பேசினர்.

அப்போது பாலிவாலின் மொபைல் போன் சிம் கார்டை முடக்க போவதாக அவர்கள் மிரட்டினர்.

மேலும் பாலிவால் மீது மும்பையில் மட்டும், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சற்று நேரத்தில் இது தொடர்பாக ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் உங்களிடம் பேசுவார் என கூறி, வீடியோ கால் இணைப்பை துண்டித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மும்பை கொலபா போலீஸ் நிலையத்தில் இருந்து சி.பி.ஐ., அதிகாரி பேசுவதாக கூறி மற்றொரு நபர் பாலிவாலை தொடர்பு கொண்டார்.

அப்போது, 'உங்களையும், குடும்பத்தினர் இருவரையும், டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம்' என கூறினார்.

இதில் இருந்து விடுவிக்க பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். இவ்வாறு ஐந்து நாட்களில் பாலிவாலிடம் மொத்தம் 1.10 கோடி ரூபாய் ஆன்லைன் வாயிலாக கறந்துள்ளனர்.

இதுகுறித்து பாலிவால் அளித்த புகாரின்படி, நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement