மத்திய அரசின் நிதியை சுரண்டுகிறீர்கள் : மம்தா மீது நிர்மலா பாய்ச்சல்

3

புதுடில்லி ;மத்திய அரசு திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை சுரண்டி, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு மிகப்பெரும் ஊழலில் ஈடுபட்டு வருவதாக மத்திய
நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் விமர்சித்தார்.


பட்ஜெட் குறித்த விவாதம் லோக்சபாவில் நேற்று நடந்தது.இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவரது உரைக்கு, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மத்திய அரசின் நுாறு நாள் வேலைத் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை முறைகேடாக பயன்படுத்தி, தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரசார் பயன்படுத்தி உள்ளனர்.
மக்களின் வரி பணத்தை கொள்ளையடித்ததுடன், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வரும் மற்ற மாநில அரசுகளுக்கு இதுவரை 25,798 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால், மேற்கு வங்கத்தில் இத்திட்டம் முறைகேடாக நடைமுறைப்படுத்தப்பட்டது.இதுகுறித்து முறையான விளக்கமும் அளிக்கவில்லை.


இதேபோல் நுாறு நாள் வேலைத்திட்டத்தில், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றியதாக போலி கணக்கு காண்பித்து, மக்களின் வரிப்பணத்தை திரிணமுல் காங்., நிர்வாகிகள் கொள்ளையடித்துள்ளனர். தற்போது, மேற்கு வங்கத்தில் புதிய வேலைவாய்ப்புகள், தொழிற்சாலைகள், மாநிலத்தை முன்னேற்றம் அடைய செய்யும் எதிர்கால திட்டங்களோ இல்லை.கடந்த 2021 - 22 நிதியாண்டின்படி, மாநிலத்தின் உற்பத்தி திறன் தேசிய அளவில் ஒப்பிடும்போது 3.5 சதவீதமாக சரிந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement