இதை செய்யாவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

11

ஜெருசலேம்: 'ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமைக்குள் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.



மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023, அக்., 7ல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.


ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டி, பிணைக்கைதிகள் விடுவிப்பதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.


இந்நிலையில், ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமைக்குள் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: ஹமாஸ் அமைப்பு இறுதியாக தோற்கடிக்கப்படும் வரை ராணுவம் தீவிர சண்டையில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, வரும் சனிக்கிழமைக்குள் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement