அடுத்தடுத்து நான்கு திருமணம்; காட்டிக் கொடுத்தது 'பேஸ்புக்': 'கேரள கல்யாணராம'னுக்கு 'கம்பி'

6

திருவனந்தபுரம்: அடுத்தடுத்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த, 'கேரள கல்யாணராமன்' ஒருவர், தன் இரு மனைவியர் முகநுால் தோழியராக இருந்ததால் குட்டு வெளிப்பட்டு, தற்போது 'கம்பி' எண்ணுகிறார்.


கேரள மாநிலம், காசர்கோடு அருகே வெள்ளரிக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் தீபு பிலிப், 36. பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டவர். தன் மனதுக்கு பிடித்த பெண்ணை பார்த்தால், அவரிடம் எப்படியாவது பழகி, அவரிடம் தான் ஒரு அனாதை என்றும், இதனால் தனக்கு பெண் கிடைக்காததால் நீண்ட காலமாக தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறுவார்.


சில பெண்கள் மனமிறங்கி உடனடியாக அவரது வலையில் விழுந்து விடுவர். இப்படி தான், 10 ஆண்டுகளுக்கு முன், காசர்கோட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை முதல் திருமணம் செய்தார். மூன்று ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தார். இரண்டு குழந்தைகள் பிறந்தன. பின்னர், அப்பெண்ணிடமிருந்து நகை, பணத்தை பறித்துக் கொண்டு தலைமறைவானார்.


தொடர்ந்து, காசர்கோட்டிலேயே இரண்டாவது திருமணம் செய்தார். அந்த பெண்ணுடன் தமிழகத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்தார். ஒரு கட்டத்தில் அவரையும் விட்டு, எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.


இவருடன் இருந்த போதுதான், ஆலப்புழாவைச் சேர்ந்த விவாகரத்தான ஒரு பெண்ணுடன் முகநுாலில் பழக்கம் ஏற்பட்டது. அவரையும் தன் வலையில் வீழ்த்திய தீபு பிலிப், நான்காவதாக அவரை திருமணம் செய்தார். இந்த நான்காவது மனைவி வாயிலாக தான் தனக்கு சிக்கல் எழப்போகிறது என்பதை, தீபு பிலிப் அப்போது உணரவில்லை.


தீபு பிலிப்பின் இரண்டாவது மற்றும் நான்காவது மனைவியர் முகநுாலில் தோழிகளாகி உள்ளனர். இருவரும் தங்கள் கணவரை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட போதுதான், இருவருக்கும் ஒரே நபர்தான் கணவர் என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து, நான்காவது மனைவி போலீசில் புகார் செய்ய, தீபு பிலிப் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

Advertisement