நீர் மேலாண்மையை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

திருக்கோவிலுார் : தென்பெண்ணையாறு வறண்டதால் நீர் மேலாண்மையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வடகிழக்கு பருவமழையின் போது, பெஞ்சல் புயல் காரணமாக, சாத்தனுார் அணை வேகமாக நிரம்பியது. முதல் கட்டமாக கடந்த நவம்பரில், அணையிலிருந்து வினாடிக்கு 550 கன அடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து டிசம்பரில், ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

மழையின் தீவிரம் குறைந்ததால், அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், கடந்த, 7ம் தேதி நீர்வரத்து முற்றிலுமாக நின்று போனது. இருப்பினும் வலது மற்றும் இடது புற கால்வாய் வழியாக, பாசனத்திற்கு வினாடிக்கு 520 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

தற்போது பெண்ணையாறு வறண்டு காணப்படுகிறது. மூங்கில்துறைபட்டில் துவங்கி கடலுார் வரை மணல் மிகுந்த பகுதியாக இருப்பதால் ஆங்காங்கே ஆழ்துளை, திறந்த வெளி கிணறுகள் அமைத்து கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

கடந்த காலங்களில் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த நிலையில், தற்போது பெருமளவில் மணல் எடுக்கப்பட்டதால் தண்ணீரை சேமித்து வைக்கும் திறனை இழந்து விட்டது. வரும் காலங்களில் மணல் சுரண்டலை தடுத்து நீர் மேலாண்மையை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement