தடை நாட்களில் போலி, அனுமதியற்ற மது விற்பனை தாராளம்; 'கவனிப்பு', அரசியல் செல்வாக்கால் கண்டுக்காது ஜோர்

மாவட்டத்தில் 150க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் பார் ஒதுக்கீடு உள்ளது. பார் ஒதுக்கீட்டை பெற, டெண்டர் தொகை, இரு மடங்கு காப்பு தொகை செலுத்தப்பட வேண்டியது அவசியம். மாவட்டம் முழுவதும் கூடுதலான எண்ணிக்கையில் பார்கள் இயங்கி வரும் சூழலில் பெரும்பாலானவை உரிய அனுமதி பெறாதவையாக உள்ளன. ஒவ்வொரு கடையை சுற்றிலும் அந்தந்த பகுதி அரசியல் பிரமுகர்களின் ஆதரவுடன் அனுமதியற்ற விற்பனை(செல்லிங்) அமோகமாக நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் முக்கிய சந்திப்பு மட்டுமின்றி இதுபோன்ற விற்பனை நடக்காத கிராமப்புற ரோடுகளே இல்லை என்ற அளவில் தாராளமாக உள்ளன.


கடைகளுக்கான மது ஒதுக்கீட்டில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான பெட்டிகள் செல்லிங் விற்பனைக்கு செல்கிறது. குடிமகன்கள் அதிகம் விரும்பும் ரகங்களை அனுமதியற்ற விற்பனைக்கு மொத்தமாக வழங்குவதாகவும் புகார் நிலவுகிறது. இதனால் டாஸ்மாக் கடை விடுமுறை நாட்களில் இவற்றின் விற்பனை பல மடங்கு அதிகரிக்கிறது. விலையையும் 50 முதல் 180 ரூபாய் வரை கூடுதலாக நிர்ணயித்து விற்கின்றனர். அரசியல் பிரமுகர்கள் ஆதிக்கத்தால் செல்லிங் தாராளமாக நடக்கிறது. இவற்றை கட்டுப்படுத்துவதில் போலீஸ், கலால் துறை இணைந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் தொய்வை தவிர்க்க வேண்டும்.

Advertisement