கோவில் வடிவில் மேடை, ருத்ரவன்னியர் சிலை: ஆன்மிக அடையாளத்திற்குள் செல்லும் பா.ம.க.,
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852751.jpg?width=1000&height=625)
சென்னை : கும்பகோணம் சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டில், ஐராவதீஸ்வரர் கோவில் வடிவில் மேடை, ருத்ரவன்னிய மகாராஜன் சிலை என, முழுக்க வன்னியர் மற்றும் ஆன்மிக அடையாளத்தை, பா.ம.க., கையிலெடுத்து உள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், வரும் 23ம் தேதி கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மாநாடு நடக்கவுள்ளது. இதற்கு, 'சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு' என, பெயரிடப்பட்டுள்ளது.
உத்தரவு
சட்டசபை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், இந்த மாநாட்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வன்னியர் சமுதாயத்தின் முழுமையான ஆதரவை பெறும் வகையில், கும்பகோணம் மாநாட்டு ஏற்பாடுகளை, பா.ம.க., செய்து வருகிறது.
'தமிழகத்தில் பிரமாண்ட மாநாடுகளை நடத்துவதில், நம்மை விஞ்சியவர்கள் எவரும் இல்லை என்று அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், கும்பகோணம் மாநாடு வெற்றிகரமாக அமைய வேண்டும்.
'அதற்காக பா.ம.க.,வினர், குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் போர்முரசு கொட்டி வர வேண்டும். மாநாட்டில் பங்கேற்பதற்கு பயணிக்கத் தேவையான வாகன முன்பதிவுகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும்.
'மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கூடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில் வடிவில் மாநாட்டு மேடையும், மாநாடு நடக்கும் திடலின் முகப்பில், யாகத்திலிருந்து உயிர்பெற்று வரும் ருத்ரவன்னிய மகாராஜனின் உருவச் சிலையும் அமைக்கப்பட உள்ளதாகவும் பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.
மாநாட்டு விளம்பரங்கள் அனைத்திலும் ருத்ரவன்னிய மகாராஜன் படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என, ராமதாஸ் ஏற்கனவே உத்தரவிட்டுஉள்ளார்.
திரட்டப்படும் ஆதரவு
வன்னியர் சங்கத் தலைவராக இருந்த, மறைந்த காடுவெட்டி குரு மற்றும் வன்னியர் வரலாற்று வீடியோ, ஆடியோ பதிவு களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பா.ம.க.,வினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
பா.ம.க., தலைமை அலுவலகமாக செயல்படும், ராமதாஸ் வசிக்கும் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், காரல் மார்க்ஸ், அம்பேத்கர், ஈ.வெ.ரா., சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கட்சி நடத்தும் மாநாட்டில் கோவில் வடிவில் மேடை, ருத்ர வன்னிய மகாராஜன் சிலை என, முழுக்க வன்னியர், ஆன்மிக அடையாளத்தை பா.ம.க., கையிலெடுத்து உள்ளது.
வன்னியர்களை முழுமையாக ஒருங்கிணைக்கும் முயற்சியாக இது நடக்கிறது; இதற்கு என்ன பலன் கிடைக்கும் என்று தெரியவில்லை என, பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.
மேலும்
-
ராணுவத்திற்கு எதிரான கருத்து: ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
-
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரான்சில் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
-
இதை செய்யாவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
-
கொன்னையாரில் நிலா பிள்ளையார் விழா
-
வேப்ப மரங்கள் வெட்டி விற்பனை; வி.ஏ.ஓ., புகார்
-
பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து