புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் வழிபாடு 

தஞ்சாவூர் : தஞ்சாவூர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று கோவிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார்.


அவரை கோவில் சார்பில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, கோவில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதையுடனும், மேள, தாளத்துடனும் வரவேற்பு அளித்தனர்.பிறகு, சுவாமி தரிசனம் செய்த சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கோவில் முழுதும் சுற்றிப் பார்த்தார்.


மேலும், கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தியதற்காக, பாபாஜி ராஜா போன்ஸ்லேக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி சார்பில், பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. மேலும், இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மண்டலாபிஷேகம் நேற்று துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement