வார்டு விசிட்
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பேரூராட்சி 7வது வார்டில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர் மண்டிய ஓடையால் சுகாதாரக்கேடு, விஷப் பூச்சிகள் நடமாட்டம், மழை நீர் தேக்கத்தால் சிரமம், தாமிரபரணி குடிநீருக்கு எதிர்பார்ப்பு போன்ற குறைகளை சரி செய்து தர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலப்பாளையம் தெற்கு தெரு, தலகாணி தெரு ஆகிய பகுதிகளை கொண்டது இந்த வார்டு. பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நீதிமன்ற வளாகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் இந்த வார்டில் செயல்பட்டு வருகிறது.
அனைத்து தெருக்களிலும் பேவர்பிளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறுகிய சந்துகளிலும் பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தாலுகா அலுவலகத்தில் இருந்து விசாலாட்சி அம்மன் கோயில் வரை உள்ள ஹேம்நாத் நீர்வரத்து ஓடை 40 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து கழிவுகள் தேங்கி அசுத்தமாக உள்ளது.
இதனால் கொசு தொல்லை, சுகாதாரக் கேடு விஷப்பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது.
உள்ளூர் நீராதாரம் மூலம் வழங்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் தாமிரபரணி குடிநீரை விலை கொடுத்தும் மக்கள் வாங்கும் நிலையுள்ளது.
மேலப்பாளையம் தெற்கு தெருவில் குடியிருப்புகளின் மையப் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் சுகாதார வளாகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஓடையை துார்வார வேண்டும்
குருவு, குடியிருப்பாளர்: கடந்த ஒரு தலைமுறைக்கும் மேலாக சேம்நாத் ஓடை செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடைக்கிறது. இதனால் கொசு தொல்லையும், இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே, ஓடையை முழு அளவில் துார் வாரி தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.
-தேவை தாமிரபரணி குடிநீர்
தங்கமணி, குடியிருப்பாளர்: நீர்வரத்து ஓடை புதர் மண்டி கிடப்பதால் மழை பெய்யும் போது வீடுகளை சுற்றி மழை நீர் தேங்குகிறது.
இதனை சுத்தம் செய்ய வேண்டும். உள்ளூர் நீராதாரம் மூலம் வழங்க குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருப்பதால் தாமிரபரணி தண்ணீர் வழங்க வேண்டும்.
பேரூராட்சியில் கோரிக்கை
-முத்துப்பாண்டி, வார்டு உறுப்பினர்: வார்டுகளுக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் ரோடு அமைத்தல், பெண்கள் சுகாதார வளாகம் அமைத்தல், பேரூராட்சி, நீதிமன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் மெயின் ரோட்டை சீரமைத்தல், சேம் நாத் ஓடையை தூர்வாரி தடுப்புச் சுவர் கட்டுதல், குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்கள் சுகாதார வளாகத்தை இடமாற்றம் செய்தல், குறுகிய தெருகளிலும் பேவர் பிளாக் ரோடு அமைத்தல், தாமிரபரணி குடிநீர் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தில் தெரிவித்துள்ளேன். இதில் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.