துப்புரவு தொழிலாளி வேலை போதும்; பஞ்சாயத்து தலைவி பதவி தேவையில்லை; உ.பி.,யில் நெகிழ்ச்சி சம்பவம்!

16

லக்னோ: உ.பி.யின் சஹாரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவி ஒருவர், தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு துப்புரவு தொழிலாளியாக பணியில் சேர்ந்தார். குழந்தைகள் மூவரை காப்பாற்றுவதற்கு இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.


உ.பி.,யின் சஹாரன்பூர் மாவட்டத்துக்கு உட்பட்டது குட்கஜ்பூர் பஞ்சாயத்து. இதன் தலைவராக கீதா தேவி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் துப்புரவு பணியாளராக இருந்தார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள்.

இந்த நிலையில், கணவர் திடீரென சாலை விபத்தில் உயிரிழந்தார். குடும்பத்தை காப்பாற்ற வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கிடைக்கும் மாதம் 5 ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை. அதுவும் இன்னும் ஓராண்டு தான் பதவிக்காலம் இருக்கிறது. அதன் பிறகு அந்த பதவி மீண்டும் கிடைக்குமா என்ற உறுதி கிடையாது.


இந்த நிலையில், பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கணவர் இறப்புக்காக வாரிசு அடிப்படையில் அரசு வழங்கும் துப்புரவு தொழிலாளி பணியை ஏற்க கீதா தேவி முடிவு செய்தார். அதன்படி பணியிலும் சேர்ந்தார்.


பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்களை தீர்மானித்து கையெழுத்து போடும் அதிகாரம் கொண்ட தலைவர் என்ற நிலையில் இருந்தவர், அதே ஊராட்சியில் துப்புரவு பணிக்கு வந்தது, கிராமத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து கீதா தேவி கூறியதாவது: என் கணவர் இருந்தவரை, அவரது மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானம், குடும்பம் நடத்த போதுமானதாக இருந்தது. இப்போது அவரும் இல்லாத சூழலில், என் மூன்று குழந்தைகளை காப்பாற்ற எனக்கு வேறு வழியில்லை. எனவே தான் இந்த முடிவை எடுத்தேன்.
இவ்வாறு கீதா தேவி கூறினார்.


கிராம மக்கள் கூறுகையில், ''அவர் ஒரு துணிச்சலான பெண்மணி, ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளார். நாங்கள் அவரை மதிக்கிறோம்,'' என்றனர்.
கீதாவின் ராஜினாமாவுடன், அந்தக் கிராமம் இப்போது புதிய தேர்தலுக்குத் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement