இந்தியா இமாலய வெற்றி * கோப்பை கைப்பற்றி அசத்தல் * சதம் விளாசினார் சுப்மன் கில்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853052.jpg?width=1000&height=625)
ஆமதாபாத்: ஆமதாபாத் போட்டியில் இந்திய அணி, 142 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.
இந்தியா வந்த இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இந்திய அணி, தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. மூன்றாவது போட்டி நேற்று உலகின் பெரிய மோடி மைதானத்தில் (ஆமதாபாத்) நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், இம்முறை பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் முகமது ஷமி, ஜடேஜா, வருண் சக்ரவர்த்திக்கு ஓய்வு தரப்பட்டது. குல்தீப், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சேர்க்கப்பட்டனர்.
கோலி அரைசதம்
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தது. மார்க் உட் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ரோகித் (1) அவுட்டானார். சுப்மன் கில், கோலி இணைந்தனர். அட்கின்சன் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சுப்மன், அரைசதம் கடந்தார். லிவிங்ஸ்டன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கோலி, ஒருநாள் அரங்கில் 73வது அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்த போது, கோலி (52), ரஷித் சுழலில் அவுட்டானார்.
சுப்மன் கலக்கல்
ஸ்ரேயாஸ் தன் பங்கிற்கு வேகமாக ரன் சேர்த்தார். இந்திய அணி 31 ஓவரில் 202/2 ரன் எடுத்தது. உட் பந்தில் பவுண்டரி அடித்த சுப்மன், ஒருநாள் அரங்கில் தனது 7வது சதம் (95வது பந்து) கடந்தார். இவர், 112 ரன் எடுத்த போது, ரஷித் 'சுழலில்' போல்டானார். நேற்று ஐந்தாவது இடத்தில் களமிறங்கினார் ராகுல்.
ஸ்ரேயாஸ், தன் பங்கிற்கு 20வது அரைசதம் அடித்தார். ரஷித் பந்தில் பவுண்டரி அடித்த ஸ்ரேயாஸ் (78), அவரிடமே வீழ்ந்தார். வந்த வேகத்தில் ரஷித் பந்தில் அடுத்தடுத்து சிக்சர் அடித்த பாண்ட்யா (17) நிலைக்கவில்லை. இந்திய அணி 41 ஓவரில் 289/5 ரன் எடுத்தது.
குறைந்த 'வேகம்'
இதன் பின் அணியின் ரன் வேகம் குறைந்தது. அக்சர் (13) கைவிட, ராகுல் 40 ரன் எடுத்தார். ஹர்ஷித் (13), வாஷிங்டன் (14), அர்ஷ்தீப் (2) ஏமாற்ற, இந்திய அணி கடைசி 54 பந்தில், 67 ரன் மட்டும் எடுத்தது. 50 ஓவரில் இந்திய அணி 356 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஷித் 4, உட் 2 விக்கெட் சாய்த்தனர்.
கடின இலக்கு
இங்கிலாந்து அணிக்கு டக்கெட், பில் சால்ட் ஜோடி வேகமான துவக்கம் தந்தது. 6.2 ஓவரில் 60 ரன் எடுத்த போது, டக்கெட்டை (34) வெளியேற்றினார் அர்ஷ்தீப். தொடர்ந்து சால்ட்டையும் (23) அவுட்டாக்கினார். பான்டன் (38) குல்தீப் சுழலில் சிக்கினார். ஜோ ரூட்டை (24) அக்சர் படேல் போல்டாக்கினார்.
பட்லர் (6), ஹாரி புரூக் (19) என இருவரையும் ஹர்ஷித் ராணா வெளியேற்றினார். வாஷிங்டன் சுந்தர் பந்தில் லிவிங்ஸ்டன் (9) பெவிலியன் திரும்பினார். தன் பங்கிற்கு கைகொடுத்த பாண்ட்யா, ரஷித் (0), மார்க் உட்டை (9) வீழ்த்தினார். கடைசியில் அட்கின்சன் (38) அவுட்டாக, இங்கிலாந்து அணி 34.2 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
நாக்பூர், கட்டாக், ஆமதாபாத் என மூன்று போட்டியிலும் அசத்திய இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றியுடன், கோப்பை வசப்படுத்தியது.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப், ஹர்ஷித், அக்சர், பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பச்சை பட்டை
உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் வகையில் நேற்று, இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் பச்சை நிற பட்டை அணிந்து விளையாடினர்.
சச்சினை முந்தினார்
ஆசிய மண்ணில் நடந்த மூன்று வித போட்டிகளில் அதிவேகமாக 16,000 ரன் எடுத்த வீரர் வரிசையில் இந்தியாவின் சச்சினை (353) முந்தினார் கோலி. இவர், 340 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார். இலங்கையின் சங்ககரா (360), ஜெயவர்தனா (401) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
* ஆசிய அளவில் அதிக ரன் குவித்த வீரர்களில் சச்சின் (21,741), சங்ககரா (18,423), ஜெயவர்தனாவுக்கு (17,386), அடுத்து கோலி (16,000) உள்ளார்.
கோலி '4000'
நேற்று 52 ரன் எடுத்த கோலி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் 4000 ரன் எடுத்த முதல் இந்தியர் ஆனார். இவர் டெஸ்டில் 1991 (28), ஒருநாள் அரங்கில் 1397 (38), 'டி-20'ல் 648 (21) என மொத்தம் 87 போட்டியில் 4036 ரன் எடுத்துள்ளார். இதில் சச்சின் (3990), தோனி (2999) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
* தவிர, ஆஸ்திரேலியா (5393), இலங்கை (4076) என மூன்று அணிகளுக்கு எதிராக 4000 ரன்னுக்கும் மேல் எடுத்த முதல் இந்திய வீரர் ஆனார்.
10 முறை
இந்திய அணி கடைசியாக 2023 உலக கோப்பை அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக 'டாஸ்' வென்றது. இதன் பின் நேற்று வரை என தொடர்ந்து 10 வது முறையாக இந்தியா 'டாஸ்' வெல்லவில்லை.
நெதர்லாந்து அணி தொடர்ந்து 11 முறை 'டாஸ்' வெல்லாதது (2011 மார்ச் முதல் 2013 ஆகஸ்ட்) முதலிடத்தில் உள்ளது.
142 ரன்
நேற்று 142 ரன்னில் வெற்றி பெற்ற இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அரங்கில் ரன் அடிப்படையில் தனது இரண்டாவது பெரிய வெற்றியை பதிவு செய்தது. 2008, ராஜ்கோட் போட்டியில் 158 ரன்னில் வெற்றி பெற்றது முதலிடத்தில் உள்ளது.
மூன்றாவது முறை
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மூன்றாவது முறையாக முழுமையாக இழந்தது இங்கிலாந்து அணி. இம்முறை ரோகித் தலைமையில் இந்தியா 3-0 என வென்றது. முன்னதாக 2008ல் 5-0, 2011ல் 3-0 என தோனி தலைமையிலான இந்திய அணியிடம் வீழ்ந்தது இங்கிலாந்து.
மேலும்
-
திருப்பணி நிதி முறைகேடு புகாரால் கொடையாளர் விபரம் வெளியிட முடிவு
-
மழைநீர் வெளியேற வழியில்லாததால் 2 மாதமாக சாலையில் தேங்கும் தண்ணீர்
-
நெல் விற்ற பணம் கடனுக்கு பிடித்தம் வங்கிகளால் விவசாயிகள் அதிர்ச்சி
-
மாணவியருக்கு சீண்டல் விடுதி சமையலர் கைது
-
திருத்தணி முருகன் கோவிலுக்கு திருப்பூர் தொழிலதிபர் பஸ் காணிக்கை
-
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் தேர் மண்டபத்தை சூழ்ந்த செடிகள் அகற்றம்