குடிபோதையில் தகராறு விவசாயி அடித்து கொலை
ஜமுனாமரத்துார்:குடிபோதையில் தகராறு செய்து வந்த விவசாயி அடித்துக் கொல்லப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள புதுாரான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 40; விவசாயி. இவருக்கும், கல்யாணமந்தை கிராமத்தைச் சேர்ந்த லதா, 38, என்பவருக்கும், 20 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. மகன், 3 மகள்கள் உள்ளனர்.
சங்கர் மதுவுக்கு அடிமையாகி, போதையில் மனைவி, குழந்தைகளை கொடுமைபடுத்தி வந்தார். நேற்று முன்தினம் லதாவிடம், மது போதையில் தகராறு செய்தார். கல்யாணமந்தையில் உள்ள தன் தம்பிகளான பிரபு, 36, செந்தில், 28, அதே ஊரைச் சேர்ந்த உறவினர் ஆனந்தன், 24, ஆகியோரை அழைத்து, சங்கரை லதா தட்டிக்கேட்டார். சங்கர், அவர்களையும் ஆபாசமாக திட்டி தாக்க முயன்றார். இதனால், அவர்கள் பதிலுக்கு தாக்கியதில் சங்கர் உயிரிழந்தார்.
ஜமுனாமரத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.