திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் தேர் மண்டபத்தை சூழ்ந்த செடிகள் அகற்றம்

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான தேரை பாதுகாப்பாக நிறுத்த காவல் நிலையம் அருகே மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், பங்குனி உத்திரத்தின் போது இக்கோவிலில் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். வரும் ஏப்ரல் மாதம், இத்திருவிழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், சமீபகாலமாக தேர் மண்டபம் முறையான பராமரிப்பு இன்றியும், ஆங்காங்கே புதர் சூழ்ந்தும் காணப்பட்டது. இதனால் பகுதிவாசிகள் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் அவதியடைந்தனர். மேலும், புதரை அகற்றி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, நேற்று, திருத்தணி கோவில் அதிகாரிகள் முன்னிலையில் தேர் மண்டபத்திற்கு சொந்தமான இடங்களில் வளர்ந்திருந்த செடிகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது.

இதுகுறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர் மண்டபத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள செடிகளை அகற்றிய பின் அளவீடு செய்து, பராமரிக்க உள்ளோம். ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தாலும் அகற்றப்படும்,'' என்றார்.

Advertisement