திருத்தணி முருகன் கோவிலுக்கு திருப்பூர் தொழிலதிபர் பஸ் காணிக்கை

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில், திருத்தணி பேருந்து நிலையம் அருகே, தணிகை இல்லத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு, இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளில் அதிகளவில் பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். மேலும், கூடுதல் பேருந்துகள் இல்லாமல் மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுதவிர, கிருத்திகை மற்றும் விழா நாட்களில், இரண்டு பேருந்துகள் போதுமான இல்லாததால் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்து ஒன்றை திருத்தணி முருகன் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.

பேருந்துக்கான ஆர்.சி.,புத்தகம் மற்றும் சாவியை கோவில் அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் கோவில் கண்காணிப்பாளர் சித்ராதேவி ஆகியோரிடம் தொழிலதிபர் வழங்கினார்.

இனிவரும் நாட்களில், கோவில் சார்பில், மூன்று பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement