மழைநீர் வெளியேற வழியில்லாததால் 2 மாதமாக சாலையில் தேங்கும் தண்ணீர்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853405.jpg?width=1000&height=625)
சோழவரம்,:சோழவரம் அடுத்த, தேவனேரி, எஸ்.பி.கே நகர் பகுதிகளுக்கும், சோழவரம் பஜார் பகுதிக்கும் இடையே, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காகவும், இப்பகுதியில் இணைப்பு சாலை மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு சோழவரம் பஜார் பகுதிக்கு சென்று வர இணைப்பு சாலை வழியாக சுரங்கப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
சிறு மழை பெய்தாலும், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள இணைப்பு சாலை பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கும். மழைநீர் வெளியேறுவதற்கான வழியில்லாததால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிப்பது தொடர்கிறது.
கடந்த ஆண்டு இறுதியில் வடகிழக்கு பருவமழையின்போது, இருபுறமும் உள்ள இணைப்பு சாலைகளில் மழைநீர் தேங்கியது. இரண்டு மாதங்களான நிலையில், மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கி கிடக்கிறது.
இதில், வாகனங்கள் சிரமத்துடனும், தடுமாற்றத்துடனும் பயணிக்கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
அசம்பாவிதங்கள் நேரிடும் முன், இணைப்பு சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.