திருப்பணி நிதி முறைகேடு புகாரால் கொடையாளர் விபரம் வெளியிட முடிவு

மதுரை:மதுரை தண்டாயுதபாணி கோவில் திருப்பணிக்கு வழங்கப்பட்ட நன்கொடையை ஊழியர் ஒருவர் சுருட்டிய புகார் எதிரொலியாக, நன்கொடையாளர்கள் விபரங்களை வெளியிட, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மதுரை, நேதாஜி ரோடு தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதில், நன்கொடையாளர்கள் வழங்கிய பல லட்சம் ரூபாயை கணக்கில் காட்டாமல், ஊழியர் ஒருவர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதை விசாரித்த அதிகாரிகள், அந்த ஊழியரிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையை ரகசியமாக துவக்கினர்.

இதுகுறித்து, நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நன்கொடையாளர்கள் பெயர்களை அறிவிக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறுகையில், ''கோவில் அர்ச்சகர்கள் சிலர் மீது பணமோசடி புகார் எழுந்துள்ளதால், அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

நன்கொடையாளர் பெயர்களை வெளியிட வேண்டும் என, இணை கமிஷனரிடம் மனு அளித்தேன். அவர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்,'' என்றார்.

Advertisement