1,000 ஆண்டு கோவில் சுவரை இடித்து புதையல் தேடிய கும்பல் தப்பியோட்டம்

4


வேலுார்: வேலுார் அருகே 1,000 ஆண்டு பழமையான கோவில் சுவரை இடித்து, புதையல் தேடிய கும்பல் பற்றி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

வேலுார் மாவட்டம், ஊசூர் அடுத்த சிவநாதபுரத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில் கைலாசகிரி மலை உள்ளது. இதன் மீது, 1,000 ஆண்டு பழமையான கைலாசநாதர் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பராமரிப்பின்றி உள்ளது.


இங்கு புதையல் உள்ளதாக நீண்ட நாட்களாக வதந்தி பரவியது.

இதையறிந்த, 10 பேர் கும்பல், மூன்று நாட்களாக அங்கு, 'டென்ட்' அமைத்து, சமைத்து சாப்பிட்டு, கோவிலில் உள்ள கருங்கல்லால் ஆன சுவரை ஆங்காங்கே உடைத்தும், கோவிலை சுற்றி பள்ளம் தோண்டியும் புதையலை தேடி உள்ளனர்.



அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஆடு, மாடு மேய்க்க மலை மீது சென்றபோது, அவர்களை கண்டு அதிர்ச்சியடைந்து, கேள்வி எழுப்பியபோது, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
Latest Tamil News

ஆடு, மாடு மேய்ப்பவர்களையே கண்டிக்கும் வனத்துறையினர், மர்ம கும்பல் மூன்று நாட்களாக தங்க எவ்வாறு அனுமதித்தனர் என, சர்ச்சை எழுந்தது.


அந்த கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, வனத்துறையினரிடம், வேலுார் மாவட்ட ஹிந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் நேற்று மனு அளித்தார்.

Advertisement