விடுதிகள் பெயரில் மோசடி சுற்றுலா பயணியரே உஷார்!

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் தங்கும் விடுதிகள் பெயரில், சமூக வலைதளத்தில் போலியாக பதிவிட்டு பணம் மோசடி செய்வதால், சுற்றுலா பயணியர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர், இங்குள்ள விடுதியில் தங்குகின்றனர். இதை பயன்படுத்தி, சமூக வலைதள மோசடி கும்பல், சில தங்கும் விடுதிகளின் முகப்பு தோற்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, 'அறைகள் காலியாகஉள்ளது' என, போலி விளம்பரம் செய்கின்றனர்.

இதை பார்க்கும் பயணியர், அதில் குறிப்பிட்டுள்ள மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு, தங்கும் அறைக்கு முன்பணம் செலுத்துகின்றனர்.

பின், ராமேஸ்வரம் வரும் பயணியர், சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்றால், 'முன்பணம் எங்களுக்கு வரவில்லை' என, விடுதி நிர்வாகம் கூறுவதால், அதிர்ச்சி அடைகின்றனர். இக்கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து, சுற்றுலா பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.

Advertisement