'இண்டியா' கூட்டணியில் பிளவே ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் சொல்கிறார் மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்
திண்டுக்கல்,:'' டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்விக்கு 'இண்டியா' கூட்டணியில் ஏற்பட்ட பிளவுதான் காரணம் ''என மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12க்கு மேலான மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் வைத்ததாக கவர்னர் மீது தொடரப்பட்ட வழக்கில் நீண்ட விசாரணை நடத்தி தற்போது முடிக்கப்பட்டது.
நீதிபதிகள் கேட்கப்பட்ட கேள்விக்கு கவர்னரும், மத்திய அரசும் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்ற காட்சியை இந்தியாவே பார்த்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் எழை, எளிய மக்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் இல்லை.
86,000 நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்கின்ற முடிவை தமிழக அரசு எடுத்தது பாராட்டுக்குரியது. பஞ்சமி நில பட்டா ரத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து கூறாதது ஏன்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில், சிக்கந்தர் தர்கா பிரச்னையில் ஹிந்து முன்னணி, பா,ஜ., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் ஒரு பதட்டமான சூழலை ஏற்படுத்த முயன்றன.
டில்லி சட்டசபை தேர்தலில் 2 விழுக்காடு ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் பா.ஜ., வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி தோல்விக்கு இண்டியா கூட்டணியில் ஏற்பட்ட பிளவு ஒரு காரணம்.
அ.தி.மு.க., பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தினசரி நடக்கிறது. இதுவரை மாணவிகள் மீது 246 ஆசிரியர்கள் பாலியல் கொடுமைகள் செய்ததாக புகார்கள் வந்துள்ளன.
வேங்கை வயல் பிரச்னையில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் 3 பேர் குற்றவாளி என குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றார்.