பெட்ரோல் குண்டுகளுடன் பைக்கில் சுற்றிய  நபர் கைது

கோவை,:கோவையில், பா.ஜ., பிரமுகர் மீது வீச, பெட்ரோல் குண்டு கொண்டு சென்றவரை, போலீசார் துரத்தி பிடித்தனர்.

கோவை, செல்வபுரம் போலீசார் நேற்று அதிகாலை, அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் இருந்தன. அந்த நபரை போலீசார் செல்வபுரம் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

விசாரணையில், அவர் செல்வபுரம் சிவாலயா தியேட்டர் பகுதியை சேர்ந்த நாசர், 34 என்பதும், பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தெற்கு கோட்ட பொறுப்பாளர் மணிகண்டன் வீட்டில் வீசுவதற்காக, பெட்ரோல் குண்டு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

போலீசார் கூறியதாவது:

மணிகண்டன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். செல்வபுரம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில், நாசரின் அண்ணன் சில மாதங்களுக்கு முன் பேப்ரிகேஷன் வேலை செய்ய சென்றிருந்தார். அப்போது, நாசர் அங்கு வந்து சென்றுள்ளார். சில நாட்களுக்கு முன் மணிகண்டனை சந்தித்த நாசர், 5,000 ரூபாய் கடன் கேட்டுள்ளார்.

அவர் பணம் தர மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த நாசர், காலி பாட்டிலில் பெட்ரோல் வாங்கி, இரு மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு தயார் செய்து, மணிகண்டன் வீட்டில் வீச கொண்டு சென்றுள்ளார்.

நாசர், இதற்கு முன், 'விஸ்வரூபம்' படம் வெளியான போது தியேட்டர் மீதும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வீடு மீதும், செல்வபுரத்தில் உள்ள ஒரு கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.

இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

நாசர்மீது போலீசார், வழக்கு பதிவு செய்து மேலும் விசாரிக்கின்றனர்.

Advertisement