தன்பாலின ஈர்ப்பாளர், திருநங்கையருக்கு ஒருங்கிணைந்த கொள்கை கூடாது முதல்வருக்கு சவுமியா கடிதம்
சென்னை:'தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கையருக்கு ஒருங்கிணைந்த கொள்கை கூடாது' என, பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:
பிறப்பிலேயே வஞ்சிக்கப்பட்ட திருநங்கையர், திருநம்பியர், தீண்டத்தகாதவர்களையும் விட மிக மோசமாக நடத்தப்படுகின்றனர். பொதுவெளியில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர் பிரசாரத்தால், அவர்களும் நம்மில் ஒருவர்தான் என்ற எண்ணம், இப்போது உருவாக துவங்கியுள்ளது. ஆனாலும், சக மனிதர்களுக்கு உரிய அனைத்து மரியாதைகள், உரிமைகளுடன் வாழ இன்னும் வெகுதுாரம் பயணிக்க வேண்டிய நிலையே உள்ளது.
திருநங்கையர், திருநம்பியருக்கு தனி கொள்கை வகுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், திருநங்கையருடன், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் சேர்த்து கொள்கை வகுக்க வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் சிலர் முறையிட்டுள்ளனர்.
அவ்வாறு ஒருங்கிணைந்த கொள்கை வகுக்கப்பட்டால்,திருநங்கையர், திருநம்பியர் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இரு பிரிவினரின் சமூக, கல்வி நிலைகளும் முற்றிலும் நேர் எதிரானவை. எனவே, இருவருக்கும் ஒரே கொள்கை வகுப்பது, சமூக நீதி ஆகாது.
திருநங்கையர், சமூகத்துடன் இரண்டற கலந்து வாழ முடியாது. சமூகத்தின் அங்கீகாரத்தை பெறும் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.
எனவே, அவர்களுக்கு தமிழக அரசு தனி கொள்கை வகுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.