ஜி.எஸ்.டி., தாக்கலில் அபராதம் விதிப்பதை நிறுத்த மத்திய செயலரிடம் வலியுறுத்தல்
சென்னை:'ஜி.எஸ்.டி., தாக்கல் செய்யும்போது, எதிர்பாராமல் ஏற்படும் சிறு தவறுகளுக்கு, 200 சதவீதம் வரை அபராதம் விதிப்பதை, ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சக செயலரிடம், தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கிண்டியில், நேற்று மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சக செயலர் எச்.சி.எல்.தாஸ், தமிழகம் உட்பட தென் மாநிலங்களை சேர்ந்த, தொழில் நிறுவனங்களின் சங்கத்தினரை சந்தித்து பேசினார்.
இதில், தமிழக அதிகாரிகள், சிறு தொழில் நிறுவனங்களின் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இது குறித்து, சிறு தொழில் துறையினர் கூறியதாவது:
பெரிய நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும், பொருட்களை வாங்கியதற்கு, பணம் தர தாமதம் செய்கின்றன.
45 நாட்களுக்கு மேல் பணம் கிடைக்காமல் பாதிக்கப்படும் நிறுவனங்கள், தொழில் வணிக ஆணையரின் கீழ் செயல்படும் வசதியாக்கல் கவுன்சிலில் புகார் தெரிவிக்கலாம்.
கவுன்சில் உத்தரவிட்டும், சில நிறுவனங்கள் பணம் தருவதில்லை. எனவே, பணம் தராத நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி, பணம் பெற்று தரும் வகையில், கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என, மத்திய அரசு செயலரிடம் வலியுறுத்தப்பட்டது.
ஜி.எஸ்.டி., தாக்கல் செய்யும் போது, சிறு, சிறு தவறுகளுக்கு எல்லாம், 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.
'தமிழகத்தில் சிறு தொழில்கள் சிறப்பாக செயல்பட, அரசு மற்றும் நிறுவனங்கள் இடையே, சிறு தொழில் சங்கங்கள் பாலமாக செயல்படுகின்றன. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்' என, மத்திய செயலர், தென் மாநில சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.