மாணவியரிடம் அத்துமீறிய தொழில்நுட்பனர் 'சஸ்பெண்ட்'
அரசு மருத்துவ கல்லுாரி பயிற்சி மாணவியரை சீண்டிய ஆய்வக தொழில்நுட்பனர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சேலம், இரும்பாலை அரசு மருத்துவ கல்லுாரி, உயிர் வேதியியல் துறையில் ஆய்வக தொழில்நுட்பனராக பணியாற்றியவர் வேலு, 55. இவர், ஆய்வக தொழில்நுட்ப பயிற்சி மாணவியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, 80 மாணவியர் கையெழுத்திட்டு ஆதாரத்துடன், டீனுக்கு புகார் அனுப்பினர்.
தொடர்ந்து, கல்லுாரி விசாகா கமிட்டி சேர்மன் சுபா தலைமையில், 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மாணவியரிடம் தனித்தனியே விசாரித்தனர். அதில், மாணவியர் வாட்ஸாப் எண்ணுக்கு, வேலு தவறான படங்கள், குறுந்தகவல்கள் அனுப்பி தொந்தரவு கொடுத்தது தெரிந்தது. இதை, அவரும் விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பான அறிக்கை, கடந்த, 4ல் சென்னை மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டது. மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி, நேற்று வேலுவை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
- நமது நிருபர் -