சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் ராகிங் பிரச்னை பெற்றோர்கள் பதிலால் விசாரணை கமிட்டி அதிர்ச்சி

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புகார் செய்ததால் ராகிங் கமிட்டி நேற்று விசாரணை செய்தது. மாணவர்கள், பெற்றோர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை என கூறியதால் விசாரணை கமிட்டியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை மருத்துவக் கல்லுாரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,படிக்கும் மாணவர்களிடம் சீனியர் மாணவர்கள் பிரச்னை செய்வதாகவும், அதிக நேரம் விளையாட்டு மைதானத்தில் விளையாட வற்புறுத்துவதாகவும் டிச.11ல் பல்கலை மானியக் குழு ராகிங் தடுப்புப் பிரிவுக்கு சிலர் புகார் அனுப்பினர். அதன் அடிப்படையில் ராகிங் தடுப்புப் பிரிவு அறிக்கை கேட்டு மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியது.

கல்லுாரி முதல்வர் சத்தியபாமா தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் விசாரித்தது. அதில் மாணவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை என மறுத்தனர். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அதேபோல் இரண்டாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்வதாகவும். ஏற்கனவே முறையாக விசாரிக்கவில்லை என பல்கலை மானியக் குழு ராகிங் தடுப்புப் பிரிவுக்கு மீண்டும் புகார் சென்றது.

பிப்.7 மருத்துவக்கல்லுாரியில் மாணவர்களிடம் ராகிங் கமிட்டி விசாரணை குழு விசாரித்தது அதிலும் மாணவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை என மறுத்தனர்.

மாணவர்களின் பெற்றோர்களிடம் விசாரிக்கலாம் என்று ராகிங் கமிட்டி முடிவெடுத்து நேற்று மாணவர்களின் பெற்றோர்களை விசாரிப்பதற்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் 18 மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் தனித்தனியாக ராகிங் கமிட்டி விசாரித்தது. அதில் யாரும் தங்கள் குழந்தைகளை ராகிங் செய்ய வில்லை என்றும் தாங்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதனால் ராகிங் கமிட்டினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

கல்லுாரி துணை முதல்வர் விசாலாட்சி கூறுகையில், ராகிங் புகார் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

Advertisement